பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சோழர் காலம்

யுள்ளார். எனவே, இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் - ஒட்டக்கூத்தருக்குப் பின் இரு நூற்றாண்டுகள் கழித்து - வாழ்ந்திருக்க வேண்டுமென்பர்.

கந்த புராணம்

முருக்கடவுளின் பிறப்பு, அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுதல், அதுபோது நிகழ்த்திய திருவிளையாடல்கள், தேவர்களைச் சிறை வீடு செய்து, சூரபன்மனை அழித்து, அமரர்கள் துயர் களைந்த அருள்திறம், வள்ளி தெய்வானை இருவரையும் மணந்த செய்தி முதலிய இன்னோரன்ன செய்திகளை இந்நூல் ஆறு காண்டங்களில் கூறுகின்றது. சைவ சித்தாந்தக் கருத்துகள் விரவி, இது காவியச்சுவையுடன் மிளிர்கின்றது. வடமொழியில் அமைந்துள்ள கந்த புராணத்தின் ஒரு பகுதியாகிய 'சங்கர சங்கிதை'யிற் கூறப்படும் ஆறுமுகக் கடவுள் வரலாற்றை அழகுபடக் கூறுகிறது.

இதன் ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் காஞ்சியில் ஆதி சைவ மரபில் தோன்றியவர். இது பதினொன்றாம் நூற்றாண்டில் எழுந்த நூல் என்பர். அகத்துறை அமைந்த அழகிய பாடல் ஒன்று காண்போம்:

"மொழியொன்று புகலா யாயின் முறுவலும் புரியா யாயின் விழியொன்று நோக்காயாயின் விரகமிக் குழல்வே னுய்யும் வழியொன்று காட்டா யாயின் மனமுஞ்சற் றுருகா யாயின் பழியொன்று நின்பாற் சூழும் பராமுகந் தவிர்தியென்றான்.

சோழர் காலமே தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சிறந்த காலப் பகுதியாய் அமைந்துள்ளது. இக்காலத்தில் தான் கலை வளர்ச்சியின் உயர்வு காணப்பட்டது. பல கவிஞரேறுகள் வாழ்ந்தார்கள். ஆட்சியும் சிறந்திருந்தது; சமய உணர்ச்சியும் மக்களிடையே மிக்கிருந்தது. எனவே, மக்களின் வாழ்வும் செழித்துத் துலங்கியது.