பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

187


பிரபந்த உரையாசிரியர்கள்

ஆழ்வார்கள் பாடிய பத்திப் பாசுரங்கள் 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என வழங்கப்படும். இப்பாடல்களுக்குப் பதினான்கு பதினைந்தாவது நூற்றாண்டுகளிலே உரைகள் எழத் தொடங்கின. உரை எழுதியவர்கள் தமிழில் வட சொற்களை மிகுதியாகக் கலந்து மணிப்பிரவாள நடையில் உரை எழுதினார்கள். தமிழின் தூய தனித்தன்மை அதனால் பாதிக்கப்பட்டது.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியினைப் பரப்பியவர் நாதமுனிகள். வைணவப் பெரியாரான இவர், பதினோராம் நூற்றாண்டிலே வாழ்ந்தார் என்பர். இவரே ஆழ்வார்கள் பாடலை முதன்முதல் தொகுத்தவர். யோக ரகசியம், நியாய தத்துவம் முதலிய நூல்கள் இவர் இயற்றியன என்பது தெரிய வருகிறது; இவருக்குப் பின்னர்த் தோன்றிய உரையாசிரியர்களைக் காண்போம்:

இராமானுசர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார்; ஆளவந்தார்க்குப்பின் வைணவ சமயத் தலைமை பூண்டார். 'உடையவர்' என்றும், 'எம்பெருமானார்' என்றும் இவரை வழங்குவர். இவர் சிறந்த சமய சீர்த்திருத்தவாதியாய் விளங்கினார்; இவர் மாணவர் பிள்ளான் என்பவர். 'திருக்குருகைப் பெருமான் 'பிள்ளான்' எனவும் இவரை வழங்குவர். திருவாய் மொழிக்கு ஆளவந்தார் முதன்முதல் உரை எழுதி இருப்பினும், எழுத்து வடிவத்தில் இவரே அதை முதலில் வெளிக்கொணர்ந்தார். இவ்வுரையே 'ஆறாயிரப்படி' என்பது. இந்நூல் ஆறாயிரங் கிரந்தங்கள் என்னும் அளவினை உடையதாகும். ஒரு கிரந்தம் எனப்படுவது ஒற்றெழுத்துகளைத் தள்ளிவிட்டு உயிரும் மெய்யுமாய் அமைந்த முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும். 'படி' என்பது அளவு என்னும் பொருள்படும். இராமானுசரின் மற்றொரு மாணவர் கூரத்தாழ்வார். அவருடைய மாணவரே திருவரங்கத்தமுதனார்.