பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

199


இவர் திருத்தணிகையில்வாழ்ந்தவர் என்பர். தொண்டை நாட்டின் சிறப்பும், அக்கால மக்களின் வரலாறும், சமயமும், வழிபாட்டு நிலையும் தணிகைப்புராணம் கொண்டு தெளியலாம்.

வீரகவிராயர்

அரிச்சந்திர புராணம் பாடிய வீரகவிராயர், பாண்டி நாட்டு நல்லூரில் பொற்கொல்லர் மரபில் பிறந்தவர். அரிச்சந்திர வெண்பா என்னும் நூலையும், அரிச்சந்திர சரிதமென்னும் வடநூலையும் முதல் நூல்களாகக் கொண்டு அரிச்சந்திர புராணம் இயற்றினார். இவர் ஆசுகவி பாடுவதில் வல்லவர். "இவர் கி. பி. 1524-இல் அரிச்சந்திர புராணம் பாடினார். ஆகவே, இவரது காலம் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியாம்" என்பர்.[1] இவர் பாடிய அரிச்சந்திர புராணம் இனிய விருத்தப் பாக்களால் ஆனது. பத்துக் காண்டங்களும் 1225 செய்யுள்களும் கொண்டது. அரிச்சந்திரன் மனைவி தன் மகன் லோகிதாசன் இறந்த பொழுது மயானத்தில் புலம்பியழும் இடம் உருக்கமான பகுதியாகும். எது நேரினும் உள்ளத்தில் கொண்ட வாய்மை தவறாத அரிச்சந்திரன், இன்றும் மக்களால் நினைவுகூரப் படுபவன்.

'பதியி ழந்தனம் பாலனை யிழந்தனம் படைத்த
நிதியி ழந்தனம் இனிஎமக் குளதென நினைக்கும்
கதியி ழக்கினும் கட்டுரை யிழக்கிலே மென்றார்;

மதியி ழந்து தன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்.'

என்ற பாடல் மேற்கூறிய உண்மையினை உணர்த்தும்.

முனைப்பாடியார்

இக்காலத்தே ஒருசில சமணரும் தமிழ்த்தொண்டு செய்துள்ளனர். முனைப்பாடியார் என்னும் சமணப்புலவர்


  1. திரு. ச. சோமசுந்தா தேசிகர், பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புயவர்கள் வரலாறு. 0.5