பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தமிழ் இலக்கிய வரலாறு


அருங்கலச்செப்பு என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு, காட்சி, ஒழுக்கம், ஞானம் என்ற முப்பொருள்களையும் 222 வெண்பாக்களிலே விளக்கியுள்ளார். 'பெருமையும் சிறுமையும் தாந்தர வருமே' என்ற கருத்தை இந்நூல் விளக்குகிறது. அருகனைச் சிவனென்ற ஒரு வியப்பான செய்தியினை ஆசிரியர் கூறியுள்ளார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் இவரது காலமாகும்.

பொய்யாமொழிப் புலவர்

தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களில் 'கோவை' என்பது ஒன்றாகும். அகப்பொருள் தொடர்ந்து நானூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களில், ஒரு நாடகக் காப்பியம்போல அமைய வேண்டுமென்பது இதன் இலக்கணமாகும். இந்த வகையில் பொய்யாமொழிப்புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை சிறந்த நூலாகும். இது அகப் பொருள் விளக்கம் என்னும் நம்பியகப் பொருள் இலக்கண நூலுக்கு இலக்கியமாகத் திகழ்கிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் மாறைநாட்டுத் தஞ்சாவூரில் வாழ்ந்த வாணன் என்னும் ஒரு சிற்றரசன் ஆவன். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியினரான பொய்யா மொழிப்புலவர், தொண்டை மண்டலத்தின் செங்காட்டுக் கோட்டத் துறையூரில், அமண்பாக்கிழார் குடியில் பிறந்தார்.

பரஞ்சோதி முனிவர்

இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களைத் தொகுத்துச் சுவைபெற நூல்கள் சில எழுந்தன. இம்முறையில் மதுரை சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை, வேம்பத்தூரார் திருவிளையாடல் குறிக்கிறது; உத்தர மகாபுராணம் என்னும் வடநூலின் ஒரு பகுதியாம் சாரசமுச்சியம் இந்நூலாக வடிவெடுத்தது. புராணம் என்றால் பழைய வரலாறு என்றும் பொருள்படும்,