பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தமிழ் இலக்கிய வரலாறு


பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் ஆகிய பத்துப் பருவங்களையும் 4339 விருத்தப்பாக்களையும் இந்நூல் கொண்டுள்ளது.

இவருடைய பாரதத்திலேயே முதன்முதல் வடசொற்கள் மிகுதியாய்க் கலந்தன. இவர் கையாண்ட வடசொற்களும் தொடர்களும் தமிழின் தூய தனி நிலையினை ஓரளவு சிதைத்தன. மேலும், பின் வந்தவர்கள் இவருடைய போக்கினைப் பின்பற்றினார்கள். பிற்காலத்தில் இம்முறையில் இருமொழிப் புலமை நிரம்பியவர்களே போற்றப்பட்டார்கள். பாரதம் முழுவதிலும் ஒருவிதச் சந்த இன்பம் நிறைந்திருக்கக் காணலாம். இது சொல்லணிகளும் பொருலணிகளும் நிறைந்து, படிப்போரை உணர்ச்சி வலைக்குட்படுத்தி மகிழ்விக்கின்றது.

இதன் ஆசிரியர் வில்லிபுத்தூரார் ஆவர். இவர் திருமுனைப்பாடி நாட்டிலே சனியூரிலே வீரராகவர் என்பவர்க்கு மைந்தராய்ப் பிறந்தார். வில்லிபுத்தூரராம் பெரியாழ்வார்மேல் கொண்ட பத்தியினால் இவர் தந்தையார் இவருக்கு இப் பெயர் இட்டார் என அறியலாம். இவரது சமயம் வைணவம் என்பது வெளிப்படை.

வக்கபாகை என்னும் நகரத்தில் அரசாண்ட, கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்ற குறுநில மன்னன் 'பிறந்த திசைக் கிசைநிற்பப் பாரதமாம்! பெருங்கதையைப் பெரியோர் தங்கள் - சிறந்த செவிக் கமுதமெனத் தமிழ் மொழியின் விருத்தத்தாற் செய்க' என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க, இவர் இப் பாரதத்தை இயற்றினார். இந் நூலுக்கு வில்லிபுத்தூரார் குமாரர் வரந்தருவார் இருபத்து மூன்று பாடல்களால் ஒரு சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்; அவற்றுள் ஒரு பாடல் அரிய நயமுடைத்து;