பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

205


இந்தக் காலத்தில் வாழ்ந்த புலவர்களின் உள்ளம் கற்பனைக் கடலில் அமிழ்ந்தது; தடையை உடைத்துப்பாயும் புதுவெள்ளம் போலவும், கட்டுக்கடந்த இறகு முளைத்த பறவை போன்றும் வானில் பறந்தது. எனவே, தமிழிற்குப் புத்தம் புதிய துறைகளான உலா, கலம்பகம். புராணம் முதலான சிறு பிரபந்தவகை நூல்கள் பெருவாரியாய் இக்காலத்திலே இயற்றப்பட்டன.

காளமேகப் புலவர்

இவர் ஆசு கவி பாடுவதிலும், வசை பாடுவதிலும் வல்லவர் என்பதை, 'ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்', 'வசைபாடக் காளமேகம்' என்றும் வருகின்ற தொடர்களால் அறியலாம். இவர் கும்பகோணத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவிலுள்ள 'நந்திபுரத்தில் இக்கால நாதன்கோயிலில் பிறந்தார். இவர் இயற்பெயர் வரதன் என்பதும், கோயிற்பணி புரியும் அந்தணர் மரபினர் என்பதும் தெரியவருகின்றன. கருமுகில் பெருமழை பொழிவது போன்று ஆசுகவியால் கவிமழை பொழிந்த பான்மையினால் காளமேகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இலக்கிய நயத்தோடு நகைச்சுவையும் கெழுமியிருத்தல் இவருடைய பாடல்களின் தனிச்சிறப்பாகும். விகடராமன் குதிரை ஓடும் ஓட்டத்தினைப் பாருங்கள்!

'முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்கப்
பின்னே இருந்திரண்டு பேர்தள்ள எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி'

நல்ல பசியுடன், கத்தும் கடல் பண்ணிசைக்கும் நாகைப்பட்டினத்திற்கு வருகிறார் கவி காளமேகம். அவ்வூர் காத்தான் சத்திரத்தில் உணவு உண்ணக் காத்திருக்கிறார்.