பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

207


இரட்டையர்கள்

பல்வகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்று பலவகைப் பாக்களால் தொடுக்கப்பட்டுள்ள நூலிற்குக் கலம்பகம் என்பது பெயராகும். தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் இதுவும் ஒன்று. நந்திக் கலம்பகத்திற்கு நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்த் தோன்றிய தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இரட்டையர்கள். இவர்கள் 'கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்' என்று புகழப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர் என்றும், மற்றவர் குருடர் என்றும், முடவரைக் குருடர் சுமந்து செல்வதும், முடவர் குருடருக்கு வழிகாட்டிச் செல்வதுமாக இவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் கூறுப. முதுசூரியர், இளஞ்சூரியர் என்று இவர்கள் வழங்கப்பட்டதாகத் 'தமிழ் நாவலர் சரிதை' [1] குறிப்பிடுகிறது. இவர்கள் சோணாட்டிலே இலந்துறை என்ற ஊரினர்; செங்குந்த மரபினர். இவர்கள் போகுமிடமெல்லாம் ஒருவர் பாட்டின் முன் இரண்டு அடிகளைப் பாட, மற்றவர் பின் இரண்டு அடிகளைப் பாடி முடிப்பது வழக்கம். இவர்கள் தில்லை அம்பலவாணர்மீது தில்லைக் கலம்பகமும், திருவாமத்தூர் சிவபிரான் மீது பத்திச்சுவையும் சொற்பொருள் நயமுமிகுந்த திருவாமாத்தூர்க் கலம்பகமும், காஞ்சிவாழ் ஏகாம்பரேசுவரர்மீது ஆயிரத்து நூற்றுப்பத்து அடிகளையுடைய சைவ மணங்கமழும் இலக்கியப் புகழ்வாய்ந்த ஏகாம்பரநாதர் உலாவும், கச்சிக் கலம்பகமும் இயற்றினர். இவர்கள் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பர்.

தொல்காப்பியத் தேவர்

திருப்பாதிரிப்புலியூர் ஈசன் மீது பாடப்பட்ட திருப் பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இவரால் இயற்றப்பட்டது.


  1. தமிழ் நாவலர் சரிதை , ப. 9.