பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தமிழ் இலக்கிய வரலாறு


'தொல்காப் பியத்தேவர் சொன்ன தமிழ்ப் பாடலன்றி

நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ?'

என்ற இரட்டையர் வாக்கால் இதனை உணரலாம்.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

நம்மாழ்வாரின் பிறப்பிடமான ஆழ்வார் திருநகரியிலே வேளாளர் மரபிலே வணிகக் குடியிலே திருமால் பக்திமிகுந்த குடும்பத்தில் சடையர் பிறந்தார்; பிற்காலத்தில் திருக்குருகைப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். இவர் மாறன் அகப்பொருள், மாறன் அலங்காரம், குருமகாத்மியம், திருப்பதிக்கோவை, கிளவி மணிமாலை, மாறன் பாப்பாவினம், நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் நூல்களைச் செய்துள்ளார். இவர் பதினாறாம் நூற்றாண்டினர்.[1]

சைவ மடங்கள் வளர்த்த தமிழ்

"சைவ மடங்கள் சமயத் துறையில் பெரும்பணியாற்றிய போதிலும், தமிழிலக்கியங்களைக் காப்பதிலும் பரப்புவதி லும் முனைந்திருந்தன. பழைய நூல்களின் அரணாயும், புதிய நூல்களின் பிறப்பிடமாயும் மடங்கள் விளங்கின. அவற்றின் தலைவர் பலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து புலமை நிரம்பியவர்களாய் விளங்கினர். ஆதலின் மடங்களில் புலவர்க்குச் சிறப்பான இடம் இருந்தது. அவ்வக் காலத்துச் சிறந்த புலவர் பலர் மடங்களில் இருந்து இலக்கியத் தொண்டு புரிந்துவந்தனர். [2]


  1. திரு. மு. ராகவையங்கார், சாசனத் தமிழ்க்க வி சரிதம், ப. 122.
  2. டாக்டர் மு. வரதராசனார், கலைக்களஞ்சியம், 5 ஆம் தொகுதி ப. 436, 437.