பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தமிழ் இலக்கிய வரலாறு


கிறித்துவ சமயப் பிரசாரத்தில் தம் வாழ்க்கையினையே காணிக்கையாகக் கொடுத்துத் தொண்டாற்றிய கிறித்தவப் பாதிரிமார்களும், கத்தோலிக்கக் குருமார்களும், தம் சமய உண்மைகளைத் தெரிவிக்க இந்நாட்டு மொழிகளைக் கற்றார்கள் என்பதை முன்னர்க் கண்டோம். அவர்கள் சமயப் பிரசாரத்திற்காகத் தமிழ்மொழியினைப் பயின்றது தமிழுக்குப் புதியதொரு பயனை விளைவித்தது. அதுவே தமிழில் உரைநடையின் வளர்ச்சியாகும். இவ்வுரைநடை வளர்ச்சியினைப்பற்றிச் சிறிது விரிவாகக் காண்போம்.

தமிழில் உரைநடை வளர்ச்சி

தன் எண்ணங்களை வெளிப்படுத்த மனிதன் பேச்சு மொழியைப் படைத்துக்கொள்வதற்கு முன்னால் தன் உணர்ச்சிகளைப் பாட்டின் மூலம் தெரிவித்துக் கொண்டான், என்ற மொழி நூலறிஞர் ஜெஸ்பர்ஸன் குறிப்பிடுகின்றார். [1] இதனால் ஒரு மொழியில் செய்யுளே உரைநடைக்குமுன் வழங்கியிருக்க வேண்டுமென்பது வெளிப்படை. 'இலக்கிய வரலாற்றில் கவிதையே உரைநடைக்கும் முற்பட்ட காலத்ததாகும்' என்று அறிஞர் எமர்சன் கூறியிருப்பதும் [2] இக்கருத்துக்கு அரண் செய்வதாகும். தமிழில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் உரைநடை அமைந்திருக்கவில்லை என்ற கூற்று முழுதும் கொள்ளக் கூடியதன்று; ஐரோப்பியர் தொடர்பால் 'உரைநடை' என்ற இலக்கியப் பிரிவு தனிக்கலையாய் வளர்ந்தது எனலாம். உரைநடை, வளர்ச்சியினையும் வாழ்வினையும் பெற்றது அவர்களால் எனலாம். தொல்காப்பியத்திலேயே உரைநடையைப் பற்றிய குறிப்


  1. Men sang out their feelings long before they were able to speak their thoughts-Otto Jespersen, Language p. 436.
  2. In the History of Literature, poetry precedes prose-Emerson's Poetry and Imagination, p. 439.