பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஐரோப்பியர் காலம்

நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் இந்நாட்டின் பழம்பெருஞ் சமயங்சளான சைவமும் வைணவமும் மக்களிடையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இசுலாமியர்கள் ஆட்சியால், இசுலாம் சமயமும் இங்குப் பரவியது. ஐரோப்பியர்களுடைய வருகையால் கிறித்தவ சமயமும் இங்கும் பரவத் தலைப்பட்டது. ஆங்கிலேயர் மக்களைக் கிறித்தவர்களாக்கத் தலைப்பட்டனர். ஆட்சியின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. இதற்கெனவே இங்கு வந்த ஐரோப்பியப் பாதிரிமார்கள், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றினார்கள். சமய மாற்றம் நிகழ்கின்றபொழுது இருவர்க்கிடையிலும் இருந்த மொழிமாறுபாட்டினை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். 'மக்களின் அன்பைப் பெறுவதற்கு வழி, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களோடு கலந்து வாழ்தலே என்பதை நன்கறிந்த இவர்கள், தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்து. தமிழ்மொழியைக் கற்று. அம் மொழி வாயிலாகத் தங்கள் சமயக்கொள்கைகளை நாட்டிற் பரப்பினார்கள். எத்தகைய இன்னல்கள் வந்துற்றபோதும் அவற்றிற்குச் சிறிதளவேனுஞ்சலியாது தங்கள் காரியத்திற் கண்ணுங் கருத்துமாயிருந்து உழைத்து வந்தமையால், கிறித்துவ சமயம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வளரலாயிற்று. கிறித்துவக் குருமார்கள் சமயத்திற்குச் செய்துவந்த தொண்டு, தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்றென்றே கருதக்கிடக்கின்றது" என்று. திரு. வி. செல்வநாயகம் குறிப்பிட்டுள்ளார்.[1]


  1. திரு. வி. செல்வநாயகம். தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் ப. 136, 137.