பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

243

மன்றோ? எந்நாட்டில் பிறந்தாலும், எந்நாட்டில் இறந்தாலும், போப்பையரைப் போன்றவர் சிறந்த தமிழரே என்பதில் தடையும் உண்டோ."

கால்டுவெல் ஐயர்

இவர். 1889-இல் அயர்லாந்து நாட்டிலிருந்து தமிழ் நாடு வந்து திருநெல்வேலியில் இடையன் குடியில் தங்கித் தாம் ஒருவராகவே இலட்சம் பேரைக் கிறித்தவர்களாக்கினார். இவர், 'திருநெல்வேலிச் சரித்திரம்' என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார்; இது தவிர, 'நற்கருணைத் தியான மாலை', 'தாமரைத் தடாகம்' என்னும் இரு நூல்களையும் இயற்றினார். இவருடைய பெயர் இன்றளவும் புகழ் பூத்து நின்று நிலவுவதற்குக் காரணம், இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian family of Languages) என்னும் நூலாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான திராவிட மொழிகள் ஓரினத்தைச் சார்ந்தவை என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டிய பெரியார் இவரே. இவருக்குத் தமிழர் நன்றிக் கடன் பட்டவர் ஆவர்.

தமிழ்க் கிறித்தவர்கள்

இங்கு வாழ்ந்துவந்த தமிழர் பலர் ஐரோப்பியர்களால் சமயமாற்றம் செய்யப்பட்டுக் கிறித்தவர்களாகி அந்தச் சமயத்திற்குத் தொண்டு செய்தனர். சிறு நூல்களையும் எழுதினர்.

வேதநாயகம் பிள்ளை

இவர், குளத்தூரிலே பிறந்து மாயூரத்தில் மாவட்ட முனிசீப்பாக வேலை பார்த்தவர்: எல்லாச் சமயத்தினரும் சமரச மனப்பான்மையோடு வாழவேண்டுமென்ற நோக்கம்