பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தமிழ் இலக்கிய வரலாறு


உடையவர். இதனைச் 'சர்வ சமய சமரச கீர்த்தனம்' என்ற இவர் தம் நூலால் அறியலாம். மேலும் இவர் அரிய நீதிகள் கொண்ட நீதிநூல்களையும், பெண்களுக்குக் கல்வி தேவை என்பதை வலியுறுத்தும் முறையில் 'பெண்மதி மாலை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த சிறப்பான தொண்டு தமிழில் முதன்முதல் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவலை எழுதியதாகும். தமிழ் நாட்டில் தமிழ் நாவல்துறைக்கு வித்திட்டவர் இவரே. 'சுகுண சுந்தரி' என்ற நாவலும், 'சத்திய வேத கீர்த்தனை' என்ற நூலும் இவர்தம் இறுதிக் காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.

H. A. கிருஷ்ணப் பிள்ளை

திக்கெலாம் புகழும் திருநெல்வேலியிலே ரெட்டியார்பட்டியில் வேளாளர் மரபில் தோன்றிய இவர், கிறித்துவ சமயத்தினைச் சார்ந்தார். இவர் ஜான் பனியன் (John Bunyan) என்னும் மேனாட்டு ஆசிரியர் எழுதியுள்ள துறக்கப் பயணம் (Pilgrims Progress) என்னும் நூலினைத் தமிழ்ப்படுத்தினார். அந்நூலே தமிழில் 'இரக்ஷணிய யாத்திரிகம்' எனப்படுவது. இக் காவியத்தில் வரும் உருக்கமான ஒரு பாடலைக் காண்க. ஏசுநாதரின் பொறுமையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது இப் பாடல்:

“தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந் தெந்தாய்,
இன்னதென அறிகில்லார் தாஞ்செய்வ திப்பிழையை

மன்னியும் என் றெழிற்கனிவாய் மலர்ந்தாாநம்

அருள்வள்ளல்'

"சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பாடிய திருப்பாசுரங்களின் மணம் இரணிய மனோகரத்தில் கமழ்கின்றது. இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாய் நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப்