பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தமிழ் இலக்கிய வரலாறு


இராமச்சந்திரக் கவிராயர்

மக்கள் மதிப்பினைப் பெற்ற நகைச்சுவை தழுவிய இனிய எளிய பாடல் பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்த இவர், எல்லீசராற் பெரிதும் பாராட்டப்பட்டவர். "துன்பங்கள் அலைபோல் அடுக்கடுக்காக வரும்' என்ற கூற்றினை மெய்ப்பிக்க இவர் ஒரு பாடல் இயற்றியுள்ளார்:

'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே.'

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவராக 'மகா வித்துவான்' என்னும் சிறப்போடு துலங்கினார். நால்வகைக் கவி பாடுவதிலும் திறமை வாய்ந்த இவர் நாளொன்றுக்கு முந்நூறு பாட்டுகள் பாடினார் என்பர். திரிசிரபுரத்தில் பிறந்த இவர், துறைசை ஆதீனப் புலவராய்த் தமிழ் வளர்த்தார். இவருக்கு மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லி கொடுப்பதில் ஆர்வம் அதிகம். மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் இவரிடம் கல்வி பயின்றவரே. இவர் பதினாறு தல புராணங்களும், பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களும், நான்கு மாலைகளும், பதினாறு அந்தாதிகளும் பாடினார் என்பர். தலபுராணத்தில் திரு நாகைக் காரோணப் புராணமும், பிள்ளைத் தமிழில் சேக்கிழார் பிள்ளைத்தமிழும், மாலை நூல்களில் திருவானைக்கா இரட்டை மணி மாலையும், அந்தாதிகளில் தில்லையமக அந்தாதியும் சிறப்பானவை. இவை தவிரச் சிறு காப்பியங்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார்