பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐரோப்பியர் காலம்

253


குமரகுருபரர் வரலாற்றினையும் சிவஞான முனிவர் வரலாற்றினையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய 'சேக்கிழார் பிள்ளைத்தமிழ்' பலராலும் பாராட்டப்படுவது: சேக்கிழார்பால் இவர் கொண்ட பற்றினைத் தெரிவிப்பது. இவரைப் போன்று எண்ணிறந்த பாடல்களைத் தமிழில் எழுதியவர் வேறு இலர் எனலாம்.

இராமலிங்க அடிகள்

இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சமயத்துறையில் ஓர் ஒளி விளக்காய்த் திகழ்ந்தார். தென்னார்க்காடு மாவட்டத்தில் மருதூரில் பிறந்த இவர், சென்னையிலும் கருங்குழியிலும் வாழ்ந்து, இறுதியில் வடலூரில் தமது ஐம்பத்து ஒன்றாம் வயதில் மறைந்தார். இவருடைய தந்தையார் பெயர் இராமையாபிள்ளை; தாயார் பெயர் சின்னம்மையார். நல்ல நாவன்மை வாய்க்கப்பெற்ற இவர், புராண விரிவுரையாற்றுவதில் இளமையிலேயே சிறந்து விளங்கினார். மனுநீதிச் சோழன் வரலாற்றை 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற சிறந்த உரைநடை நூலாக எழுதியுள்ளார். மேலும், இவர் கண்ணுடை வள்ளலாரின் ஒழிவிலொடுக்க நூலின் சிறப்புப் பாயிர விரிவுரை, சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவமாலை, இங்கித மாலை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார், கொல்லாமையைச் 'சீவ காருண்யம்' என்ற தலைப்பில் 'பிள்ளைப் பெருவிண்ணப்பமாகக்' கூறுகின்றார்; இறைவனை நோக்கி மனங்கசிந்து உருகுகின்றார்.

'அப்பா நான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

ஆருயிருக் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்'

என்பதே இவர் இறைவன்பால் வேண்டும் வேண்டுகோள்.

'எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவரவர் உளந்தான் சுத்த