பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

தமிழ் இலக்கிய வரலாறு


'ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ'

என்று விடையும் தருகின்றார்.

'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்

தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!'

எனும் பாவேந்தர் பாரதிதாசன், 'கன்னற் சுவைதரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி' என்கிறார்.

இவர் எழுதிய 'பாண்டியன் பரிசு' ஒரு சிறந்த காவியம். காதலைப்பற்றியும், மகளிரைப்பற்றியும் சிறப்பாக எழுதுவதில் தேர்ந்த ஆற்றல் இவருக்குண்டு. இயற்கையோடு இயற்கையாக மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வினைச் சுட்டிக் காட்டிப் பாடல்கள் இயற்றிய புரட்சிக் கவிஞராய்ச் சமுதாயத்தில் விளங்குகிறார்.

'அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவோ நீதான்?
சிந்தாமல் சிதறாமல் அழகை எல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென்றே இயற்கை அன்னை வானில்

எழில் வாழ்வைச் சித்திரித்த வண்ணம் தானோ!'

'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்பது இவர் கருத்து. இதற்குப் பெண் கல்வி தேவை என முழங்குகிறார்:

'கல்வியில் லாத பெண்கள் களர்நிலம்; அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது நவில வோநான்?'