பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. சங்க காலம்
கி.மு. 500-கி.பி. 100


முதற் சங்கம்

'பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ்' என்று பாடினார் ஒளவையார். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துப் புலவர்களுக்கு ஊக்கம் ஊட்டிப் புதிய நூல்களின் ஆக்கத்திற்கான தொண்டினைச் செய்தார்கள். முதல் இடை கடை என்ற மூன்று சங்கங்கள் நிலவின என்ற செய்தி இறையனாரகப்பொருள் உரையால் தெரியவருகின்றது. முதற்சங்கம் குமரிக்குத் தென்பால் - கடல்கோளுக்கு முன் பரந்திருந்த நிலப்பகுதியில் இருந்த தென்மதுரையில் நிலவியிருந்த தென்றும், அச்சங்கத்தில் அகத்தியர், முரஞ்சியூர் முடிநாக ராயர் முதலிய ஐந்நூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்தனர் என்றும், அவர்களால் பாடப்பட்டவை பரிபாடல், முதுநாரை, முதுகுருகு முதலான நூல்களென்றும், அச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவிற்று என்றும், அகத்தியமே இலக்கண நூலாகப் பின் பற்றப்பட்டது என்றும் களவியலுரை கூறுகின்றது.

இடைச் சங்கம்

இடைச் சங்கத்தில் தொல்காப்பியனார், வெள்ளூர்க் காப்பியன். சிறுபாண்டரங்கனார் உள்ளிட்ட ஐம்பத்தொன்பதின்மர் புலவர்களாய் வீற்றிருந்தனர் என்றும், அவர்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் முதலிய நூல்களை இயற்றினார்கள் என்றும், அவர்களுக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாய் அமைந்தன என்றும், அச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள்