பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தமிழ் இலக்கிய வரலாறு


கவிஞர் முடியரசன் சிறந்த கவிஞர் ஆவர். இவர் பாடல்கள் முடியரசன் கவிதைகள்' என வெளிவந்துள்ளன. 'பூங்கொடி' என்பது இவரியற்றிய காப்பிய நூலாகும். “பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழு மதியே' என்று கவிஞர் நிலவினை நோக்கிப் பாடுகிறார். இயற்கைத் தாயினைக் கவிஞர்,

'தென்றலெனும் தொட்டிலிலே எனைக் கிடத்தித்
தேன்நுகர மலர்கள் தோறும்
சென்றிருந்த தமிழ்பாடும் வண்டொலியால்
செவிகுளிரத் தாலோ தாலோ
என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்
எழுந்தழுதால் ஆறு காட்டிக்
குன்றிருந்து வீழருவி கடல்காட்டிக்

கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி'.

என்று கவினுறப் பாடியுள்ளார்.

இளங் கவிஞரும், சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான வேழவேந்தன் கவிதைகள், 'வேழவேந்தன் கவிதைகள்' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன. 'நெடிய சிந்தனைக்குப் பின்னால், நெஞ்சின் அடித்தளத்திலிருந்து பீறிட்டெழுந்து. முடுக்கிப் பாய்ந்து ஓடி வருவதே. கவிதை' என்றும், 'உணர்வலைகள் உடலின் ஒவ்வொரு நரம்பணுவிலும் பாய்ந்து, உள்ளத்திலே ஒருவகைக் கொதிப்பை ஏற்படுத்தும் போது மின்னலிடுகிறது' கவிதை என்றும் கவிஞரே தம் முன்னுரையாம் 'சோலை முகப்பில்' குறிப்பிட்டுள்ளார். இக் கூற்றின் உண்மைகளை இவர்தம் கவிதைகளில் சிறக்கக் காணலாம். இவர்தம் கவிதையின் பெற்றி குறித்து நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'கவிஞர் வேழவேந்தனின் கவிதைகளில் அரிய அழகிய இனிய எளிய தமிழ்ச் சொற்கள் தங்குதடையின்றி அருவியின்