பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தமிழ் இலக்கிய வரலாறு


வளர்ந்துவரும் மற்றோர் இளங் கவிஞர் வல்லம் வேங்கடபதி ஆவர். காதலின் சிறப்பினை இக் கவிஞர் பின் வருமாறு வகுத்துக் காட்டுகின்றார்:

கண்கள் கிறங்க வருகின்றாள்
'காதல் மயக்கம் தருகின்றாள்
எல்லாம் அவளாய்த் தெரிகின்றாள்
எங்கும் அவளே நிறைகின்றாள்
பொல்லா உலகில் அவள் என் மேல்

பொங்கும் அன்பைப் பொழிகின்றாள்.'

இக் கவிதையில் 'காண்பவையெல்லாம் அவளே போறல்' என்ற பழைய மரபு பின்பற்றப்பட்டிருப்பதனைக் காணலாம். 'நாமே உலகம்' என்ற கவிதையில் கவிஞர் நம்மை யெல்லாம் அறம் காணும் முயற்சிக்கு அடிகோலவேண்டும் என்று அழைக்கின்றார்.

'கவலையெனும் சுடுகாட்டில் உலக மக்கள் கணந்தோறும் வேகின்றார்; சாகின்றார்கள்' கவலையினால் ஆவதிங்கே ஒன்று மில்லை கவலையினை விட்டொழிக்கக் கற்றுக் கொள்வோம் துவண்டுவிழும் மனப்பாங்கைத் துடைத் தொழிப்போம் துணிச்சலோடு வீரநடை பழகிக் கொள்வோம் நவநவமாய்ப் புது உலகைப் படைப்போம் வாவா நாமின்றேல் உலகில்லை; உயிர்கள் இல்லை.'

கவிதைச் சோலையில் சிறகடித்து வானம்பாடிகளாகப் பறந்துவரும் கவிஞர்கள் பலர் இன்று தமிழ் இலக்கியச் சோலையில் நித்தநித்தம், புத்தம்புதுப் பண்ணிசையில் பாட்டிசைத்து தருகின்றனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனிவாசன், தமிழோவியன், மு. பி. பாலசுப்பிரமணியன், தமிழ்முடி, பல்லடம் மாணிக்கம், சின்னூர் இளங்கோவன், கோவை இளஞ்சேரன், இளம்பரிதி, எழில் முதல்வன், இளந்தேவன், பெருங்கவிக்கோ, மா. செல்வராசன், பொன்