பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

319


இரவில் விண்மீன் காசினை- செலுத்தி
இரவ லரோடு பேசுவேன்
இரவெரிக்கும் பரிதியை- ஏழை

விறகெரிக்க வீசுவேன்

என்ற நா. காமராசனின் சபதம் பொதுவுடைமைச் சமுதாயத்தை ஏற்படுத்தத் துடிக்கும் உள்ளத்தின் எதிரொலியாக அமைகிறது.

'குடிகாரன்' என்ற கவிதையில் நா. காமராசன் அவர்கள் கூறும்.

மாளிகைக்குப் பெர்மிட்டு

சேரிக்கு மட்டும் கைவிலங்கு

என்ற கூற்று, சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது.

புதுக் கவிதையில் நாட்டுப்புறச் சாயல்

நாட்டுப் பாடல்களில் பேச்சு வழக்கில் உள்ள வசன நடை வடிகட்டப்பட்டு, இயல்பாக, சொற்களுக்குள்ளே ஒலிநயச் சேர்க்கை குன்றாத அளவிற்கு நாட்டுப்புறக் கவிதைகளாக வாழ்கின்றன. இதனால்தான் நா. காமராசன், இன்குலாப், சிற்பி, செந்தமிழ் மாறன், புவியரசு போன்ற கவிஞர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

'ஒரு சேரிக்கிராமமும் தபால்காரன் மரணமும்' என்ற தலைப்பில் அமையும் நா. காமராசனின் கவிதை இதற்குத் தக்கதோர் சான்றாகும்.

மாசிப் பிறையடிக்கும் -
சாத்திரிகள் சொல்லவேண்டும்
மாசங்களிலே விளையாடும்

மழைமேகம் சொல்லவேண்டும்