பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தமிழ் இலக்கிய வரலாறு

திருவாசகத்தில் திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் முதலியன இசைத் தமிழ்த்துறையைச் சார்ந்த பாடல் வகைகளாகும்.

இசைத்தமிழின் பொற்காலமான தேவார காலத்தில் நாயன்மார் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் பண்முறையோடு ஓதப்பட்டு வந்துள்ளமையைக் கல்வெட்டுக் கொண்டு அறியலாம். விசயநந்தி விக்கிரமனாகிய நந்திவர்ம பல்லவனது 17ஆம் ஆட்சி ஆண்டில், கி. பி 750-ல் எழுந்த திருவல்லம் திருக்கோயிற் கல்வெட்டு ஒன்றில், ' திருப்பள்ளித் தாமம் பறிப்பார்க்கும் திருப்பதிகம் பாடுவாருள்ளிட்ட பல பணி செல்வார்க்கும் நெல்லு நானூற்றுக்காடியும்' என்று குறிப்பிடுவதால், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலேயே திருக்கோயில்களில் தேவாரப் பதிகங்கள் முறையாக ஓதப்பெற்றன என்பது தெளியலாம்.

திருஞானசம்பந்தர் காலத்திலேயே அவரொடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் சீகாழிப்பதி போந்து. சம்பந்தரை வணங்கி, அவர் பாடியருளிய தேவாரப் பதிகங்களைத் தம் யாழில் இட்டு இசைத்தும், பின்னர்த் தமிழ்நாடெங்கும் சென்று, அத் தெய்வப் பாடல்களை இசையுடன் பரப்பியும் போற்றினர் என்பது வரலாறாகும். இன்றளவும் இந்தப் பழந்தமிழ்த் தேவார இசையினை விடாது போற்றிக் காத்திருப்பவர்கள் ஒதுவா மூர்த்திகளே, அவர்களுக்குத் தமிழ் உலகம் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

பிற்காலத்தில், அதுவும் நாயக்க மன்னர்கள் காலத்தில், இசை பல்வேறு வகையாக வளர்ந்தது. கி. பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் சந்தப் பாடல்களால் ஆன திருப்புகழை இயற்றினார். பழம் பண்கள் மறைக்கப்பட்டு, இராகங்கள் வந்து சேர்ந்தன. மேலும்