பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தமிழ் இலக்கிய வரலாறு


யாவும் அமெச்சூர், தொழில் முறை சபைகள் ஆகிய இரு சாராராலும் மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள். 'மனோகரா' என்ற இவரது கற்பனை நாடகம், சென்ற 65 ஆண்டுகளாகத் தமிழ் நாடக மேடையில் அமரத்துவம் பெற்ற நாடகமாய் விளங்கிவருகிறது. தமிழ் நாடக உலகம் 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், 'தமிழ் நாடகத் தந்தை' என்று பம்மல் சம்பந்த முதலியாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது".[1]

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

'ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும்' என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடை சீர்குலைந்திருந்த அந்த நாளிலேயே குரல் எழுப்பிய பெரியார், தமிழ் நாடகத் தலைமையாசிரியர் இவர். சுவாமிகள் நாடக அமைப்புத் திறன் தெரிந்தவர்; காட்சி அமைப்பின் நுணுக்கம் அறிந்தவர்; நாடகப்போக்கு அமைப்பதில் நயங்கண்டவர். நாடகப் பாத்திரங்கள் வாயிலாக வெளிவரும் பாடல்களிலும் உரையாடல்களிலும் நல்ல பல கருத்துகளைப் பெய்துவைத்தவர். நாடகம் பார்ப்போர் பண்பும் பயனும் பெறவேண்டுமென்று பாடுபட்டவர். சுவாமிகள் ஏறத்தாழ நாற்பது நாடகங்களை எழுதியுள்ளார். அபிமன்யு சுந்தரி, சீமந்தினி, பவளக்கொடி, சதியநுசூயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், சத்தியவான் சாவித்திரி சதி சுலோசனா, வள்ளி திருமணம் முதலிய நாடகங்கள் அவற்றுள் சிலவாகும். வடமொழி நாடகமான மிருச்சகடியையும், ஷேக்ஸ்பியர் நாடகமான ரோமியோ ஜூலியத், சிம்பலைன் ஆகியவற்றையும் தமிழ் நாடகங்களாக்கியுள்ளார். நாடகத்திற்குப் பாடல்களையும் இவரே எழுதுவார். இவருடைய நாடகப் பாடல்களில் உணர்ச்சிக்கே


  1. திரு. ஔ வை டி. கே. சண்முகம், நாடகக் கலை, ப. 25.