பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

33

புறத்திணை[1] வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்னும் பகுதிகளாகக் கூறப்படும். பசு மந்தையைக் கவர்தல் வெட்சி என்றும், அதனை மீட்டல் கரந்தை என்றும், பகைவர்மேல் படையெடுத்துச் செல்வது வஞ்சி என்றும், அப்படையினை எதிர்த்து நிற்றல் காஞ்சி என்றும், எயிலைக் காத்து நிற்பது நொச்சி என்றும், மதிலை வளைத்து நிற்பது உழிஞை என்றும், இருதரப்பினரும் களங்குறித்துப் போர் செய்வது தும்பை என்றும், போர்க்களத்தில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வாகை என்றும் ஒரு பழைய தமிழ்ப் பாட்டுக் குறிக்கிறது. ஆனால், தொல்காப்பியம் இதனின்றும் சிறிது மாறுபட்டுள்ளது. இனி, தொல்காப்பியம் பற்றிக் காண்போம்.

தொல்காப்பியத்தின் பழமை

'எள்ளினின்று எண்ணெய் எடுபடு வது போல
இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்.'

ஆதலான், தொல்காப்பியனாருக்கு முன்னர், பல இலக்கியங்கள் நிலவியிருக்க வேண்டும்; அவற்றிற்கே தொல்காப்பியனார் இலக்கணம் வகுத்தார் என்பது தேற்றம். தொல்காப்பியனார் தம் நூலின் பலவிடங்களிலும் 'என்ப', “ என்மனார் புலவர்', 'மொழிப', 'யாப்பறி புலவர்', 'நூல் நவில் புலவர்' என்று கூறுவதனால், அவருக்கு முன்னர் இலக்கணங்கள் இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம்.

'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்'


  1. 'வெட்சி நிறைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
    வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் உட்கா
    தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி
    அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
    பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
    செருவென் றதுவாகை யாம்.