பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

37

ஆயின. சங்க காலத்திலேயே பல்வேறு புலவர்கள் வாழ்ந்து பாடல்களை இயற்றினர். அவர்கள் பாடல்களை எல்லாம் துய்த்துணர்ந்த சான்றோர், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற சிறந்த குறிக்கோளின் அடிப்படையிலே கடல்கோளுக்கும், கறையானுக்கும், கால வெள்ளத்திற்கும் எஞ்சி நின்ற பாடல்களில் சிறந்த சிலவற்றைப் பொருள் நோக்கியும், செய்யுள் அமைப்பின் திறம் நோக்கியும், அடிவரை அமைந்துகிடக்கும் பான்மை நோக்கியும் தொகுப்பாராயினர். இம் முயற்சி கி.பி. 3, 4ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது என்பர். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூல்களாம் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இரண்டாயிரத்து முந்நூற்றெண்பது பாடல்களைக் கொண்டுள்ளன. மூன்றடிச் சிற்றெல்லையாகவுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்கள் முதல் எழுநூற்றெண்பத்திரண்டடிப் பேரெல்லை கொண்ட மதுரைக் காஞ்சி வரையில் பலதிறத்தனவாகிய பாடல்கள் பொதிந்துள்ளன. புலவர் சிலருடைய பெயர்கள் ஏட்டுப் பிரதிகளிற் காணப்படவில்லை . சங்ககாலப் புலவர் பலர் இயற்பெயரால் வழங்கப்பெற, சிலர் தமக்கு இயற்பெயர் இருந்தோ அல்லது இருந்து மறைந்தோ தாமியற்றிய பாடல்களின் சிறப்பான தொடரினால் வழங்கப்படுகின்றனர். இவ்வாறு பெயர் காணப்படாத புலவர்களை விடுத்து, இயற்பெயராலும் காரணப்பெயராலும் அறியப்படும் புலவர் நானூற்றெழுபத்து மூவர் ஆவர். இவருள்ளும் அக்காலத்திலேயே முப்பதின்மர் பெண்பாற் புலவராய் இருந்தனர் என்பது பண்டைத் தமிழ்மகளிரின் புலமைச் சிறப்பினையும், வேறு எந்நாட்டு இலக்கியத்திற்கும் இல்லாத தனிப்பெருமையினையும் புலப்படுத்துகின்றது. நூற்றிரண்டு பாடல்களுக்கு அவற்றினை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை. நாடாளும் காவலராயும் நல்ல தமிழ்ப் பாவலராயும் ஒருசேர விளங்கிய மன்னர் இருபத்தைவராவர். எனவே, சங்க காலம் தமிழ் இலக்கியத்தின் சிறந்த பொற்காலம் என்று கொள்ள இயல்கிறது.