பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

தமிழ் இலக்கிய வாலாறு

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் இவை என்பதைக் கூறும் பழம் பாடல் ஒன்று தமிழில் வழங்குகிறது.

‘‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.’’

எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும், பாட்டும் பல புலவர்களால் இயற்றப்பட்டுத் தொழில், அளவு, பாட்டு, பொருள் என்பவற்றுள் ஒவ்வொன்றாய்த் தொகுக்கப் பெற்றமையின், அவை தொகை எனப் பெயர்பெற்றன. அவற்றுள் அகப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்குவன ஐந்து நூல்கள். அவை நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகும். மற்ற மூன்று நூல்கள்களாகிய பதிற்றுப்பத்து, பரிபாடல். புறநானூறு என்பன புறப்பொருள் பற்றி அமைந்தன. அகப்பொருளைக் கூறும் ஐந்து நூல்களும் சிறிதும் சிதை வில்லாமல் முழுமையாய் இன்றும் காணப்படுகின்றன. ஆனால், புறப்பொருள் பற்றிய நூல்களில் சில பாடல்கள் அழிந்தும், சில சிதைந்தும், பாட பேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களைக் குறிப்பிடும் வெண்பாவில் இதனை முதற்கண் நிறுத்தியுள்ளனர். 9 அடி முதல் 12 அடி வரையிலும் இப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இந் நூலைத் தொகுத்தவர் இன்னார் என்பது தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியார். 'திணை' என்ற சொல் அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த பெயராகும். திணை என்ற பெயரோடு இந்நூலுக்கு 'நல்' என்னும் அடையும் சேர்ந்து வழங்குகிறது. முதன்முதல் நூலைத் தொகுத்தவரே