பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

47


"இதன்கண் திருமால், செவ்வேள் ஆகிய தெய்வ வழிபாட்டுப் பாடல்களும், வையை, மதுரை ஆகிய இயற்கைக் காட்சிப் பாடல்களும் அமைந்துள்ளன. அவைகளில் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களும், அறம், பொருள் இன்ப வீடுபேற்றுக் கூறுபாடுகளும், இயற்கைக் காட்சியின் இயல் நலங்களும், காதற்காமச் சிறப்பும், வீரர்மேம்பாடும், அன்பும் பண்பும் ஆடலும் பாடலும் பிறவும் நெஞ்சை அள்ளும் நீர்மையவாய்ப்புலமைச் சான்றோர்களால் பொருள் பொதிய எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன."[1]

'பல வகைப் பாவடிகளையும் ஏற்று வரும் என்பதும், இலக்கணத்தால் பரிபாடல் இசை நலம் வாய்ந்தது' என்பதும் அறிகின்றோம். இது 'இன்பம் நுதலி வரும்' என்பதால், பொருட்பொலிவுடையதென்பதும் அறிகின்றோம். 25 அடி முதல் 400 அடி வரையும் இப்பாடல் நிமிர்ந்து நடைபெறும். தரவு. எருத்தம், அராகம், கொச்சகம், அடக்கியல், வாரம் என்ற உறுப்புகளுடன், எண்ணும் கலந்து இது இயங்கும்.'[2]

எழுபது பாடல்களில் இன்று கிட்டுபவை இருபத்திரண்டே. அவற்றுள் திருமாலுக்கு உரியவை ஆறு: முருகனுக்கு உரியவை எட்டு; வையைக்கு உரியவை எட்டு. இவையேயன்றிப் பழையவுரைகளிலே மேற்கோளாய்ப் பயிலும் இரண்டு பரிபாடல்களும் உண்டு.

"சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து பொருள்களின் இயற்கை அழகுகளை நன்கு தெரிவிப்பது. மதுரை. வையையாறு, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலைமலை என்பவற்றின் பண்டைக்கால நிலைமைகளையும், அக்கால நாகரிக முறையையும், வைதிக ஒழுக்கங்களையும், தெய்வ வழிபாட்டு முறையையும், பிற


  1. டாக்டர் உ. வே. சா. பரிபாடற் பதிப்பு. முன்னுரை. ப. 4
  2. டாக்டர் உ. வே. சா. பரிபாடற் பதிப்பு. முன்னுரை. ப. 4