பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ் இலக்கிய வரலாறு


என்ற பகுதியில் குமட்டூர்க் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கருத்து,

'சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்து

அறந்தெரி திகிரிக்கு வழிநடை யாகும்'

என்ற பகுதியில் அழகுறச் சுட்டப்படுகின்றது.

சேர நாட்டு வீரர்களின் வீர மேம்பாடும், வெற்றிச் சிறப்பும்,

'மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது
உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்

கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்'

என்ற பகுதியாலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் கொடைவளம்,

வாரா ராயினும் இரவலர் வேண்டித்
தேரின் தந்தவர்க்கு ஆர்பதன் நல்கும்

நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்

என்ற பகுதியாலும் அறியப்படுகின்றன.

பரிபாடல்

பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவினால் இயன்றதாதலால் இந்நூல் இப்பெயர் பெற்றது.

'பரிபா டல்லே தொகைநிலை வகையின்
இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்

பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப.'

பொருட்சிறப்பானும் நுண்மாண் நுழைபுலச் செம்மையானும் 'ஓங்கு பரிபாடல்' என்றே இந்நூல் சிறப்பாகக் கூறப்பட்டது.