பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

49


இருபத்தொன்பது பாடல்களைப் பாடியவர் கபிலர். மருதத்திணை பற்றிய முப்பத்தைந்து பாடல்களைப் பாடியவர் மருதனிள நாகனார். முல்லைத்திணை பற்றிய பதினேழு பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன். கடவுள் வாழ்த்துடன், நெய்தல் திணைக்குரிய முப்பத்து மூன்று பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். இவ்வாறு ஒரு பழைய வெண்பா கூறுகின்றது.

இலக்கண நூல்களிற் கூறும் அகப்பொருட்பகுதிகட்கு இந்நூல் இலக்கியமாய்த் திகழ்கிறது. கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூல் கலித்தொகையாகும். மக்களின் நல்வாழ்விற்கான நெறிகள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்கு நச்சினார்க்கினியார் உரை உளது.

சங்கத்தைப் பற்றிய சிறப்பான செய்தியைப் பாலைக் கலிப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அப்பாடல் வருமாறு:

'நிலனாவிற் றிருதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்

சுடரிழாய் நமக்கவர் வருது மென் றுரைத்ததை.

உதவுதல், போற்றுதல், பண்பு, அன்பு, செறிவு, முறை, பொறை குறித்துக் கலித்தொகை குறிப்பிடும் கருத்து மணியானதாகும்.

'ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வவ்வல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.'

'காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்

யாழ்வரைத் தங்கி யாங்கு'

த.-4