பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் இலக்கிய வரலாறு


முனிவர் மொழிவழி ஏவல் கேட்டல், உப்பு வாணிகர்களின் மகளிர் உப்பு ஏற்றிய பாரவண்டியினை ஓட்டிச் செல்லுதல், வணிகர்கள் மிளகுப் பொதியினைக் கழுதைமேல் ஏற்றிச் செல்லுதல் (சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி), குறிஞ்சிநிலப் பெண்கள் அச்சமற்ற மனவுறுதியோடு வாழும் வாழ்வு, கலங்கரை விளக்கத்தின் சிறப்பு முதலிய பல செய்திகளைப் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம்.

முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டிலே மிகச் சிறிய அடியளவை உடைய பாடல் இது; 103 அடிகளையுடையது; ஆசிரியப்பாவால் இயன்றது. ஆசிரியர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவர். இது முல்லைத் திணைக்கு உரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது. போர்மேற்சென்ற தலைவன் திரும்பி வருமளவும் அவன் கூறியசொல் திறம்பாது ஆற்றியிருந்த தலைவியின் செயலைக் கூறுகிறது. இடையே அகத்திணையான முல்லைக்குக் தொடர்பான புறவொழுக்கமாகிய வஞ்சியினையும் கூறுகிறது. முல்லைத் திணையை வருணிக்கும் மற்றப் பாடல்கள் எல்லாவற்றினும் இம் முல்லைப்பாட்டு நுட்பமிகவுடைய தாய்க் காணப்படுகிறது.

பாட்டின் தொடக்கத்தில் கார்கால வருணனையும். இறுதியில் முல்லை நிலத்தின் இயல்பும், இடையில் அரசனின் பாசறை அமைப்பும் நுவலப்படுகின்றன. 'கானம் நந்திய செந்நிலப் பெருவழி'யின் அழகு சுவைபடக் கூறப்படுகிறது.

மன்னன் பாசறையில், இடையில் வாளேந்திக் கையில் விளக்கேந்தி, அணையும் விளக்கை அணையாது காக்கும் மங்கையர் உள்ளனர். கண்ணைக் காக்கும் இமைபோல அரசனுக்குப் பாதுகாவலராய்ப் பெருமூதாளர் உள்ளனர். நாழிகை வட்டில் கொண்டு நாழிகை அறியும் நாழிகைக் கணக்கர் உள்ளனர். அடுத்து யவனர்களும் உள்ளார்கள்.