பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் இலக்கிய வரலாறு

மூன்றும் அகத்திணைக் கருத்துக்கள் தாங்கி மிளிர்வன. மதுரைக் காஞ்சியும் மலைபடுகடாமும் புறத்திணை பற்றியவை.

சங்க இலக்கியத்தில் பகுத்தறிவினுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இயலாது. 'எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையைச்' சங்க இலக்கியத்தில் காணல் இயலாது. உள்ளதை உள்ளவாறே கூறுதல் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு. உள்ளதை உணர்ந்தவாறு கூறுவதில் சங்கக் கவிஞர்கள் தனித்திறம் படைத்தவர்களாகக் காணப்படுகிறார்கள்.

இயற்கையின் இனிய பின்னணியில் எழுந்தவை சங்க காலக் கவிதைகள், இயற்கையின் பின்னணியில் மக்கள் வாழ்வு செம்மையுறச் சித்திரிக்கப்படுகிறது. (Life is Portrayed in the background of Nature) சங்க இலக்கியத்தில் இயற்கை பெரும்பங்கு கொண்டிருந்தாலும், மனித வாழ்வுக்கே முதலிடம் தரப்படுகின்றது. எனவே, முதற் பொருள் கருப்பொருள்களைக் காட்டிலும் உரிப்பொருள் களுக்கே பெருமதிப்பு உள்ளது. தொல்காப்பியனாரும் 'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே' என்றார்.

'அடுத்து, சங்க காலத்துப் புலவர் ஓரினத்தவர் அல்லர்; ஓரிடத்தவரல்லர்; ஒரு காலத்தவரும் அல்லர். 'எனவே, சங்க இலக்கியத்தினை நாம் 'தேசிய இலக்கியம்' எனலாம். சங்க காலத்தில் மன்னர்களுக்கிடையே அருமையான ஒருமைப்பாடு நிலவியிருந்தது எனக் கூறலாம்.

சங்க காலத்தில் பெண்பாற் புலவர் பலர் வாழ்ந்து சிறந்த கவிதைகளை இயற்றியிருப்பது அக்காலக் கல்வியின் முதிர்ச்சியினையும், பெண்ணின் பெருமையினையும் காட்டுகின்றது. ஒளவையார், ஆதிமந்தியார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், கச்சிப் போட்டு நன்னாகையார், குறமகள் இளவெயினியார், வெறி