பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

85


திருக்குறளின் காலம்

திருக்குறள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுந்த நூல் என்று திரு. மறைமலையடிகளும்,[1] கி.மு. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் எழுந்த நூல் என்று திரு. இராமச்சந்திர தீட்சிதரும், கி. பி. ஆறாம் நூற்றாண்டில் எழுந்த நூலென்று திரு. வையாபுரிப் பிள்ளையவர்களும் ஆராய்ந்து கூறுகின்றனர். திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று அகச்சான்றுகள் சிலவற்றைக் காட்டி, 'இதனால் கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த நூலே திருக்குறள்' என்பர். திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள். ஆனால் தீட்சிதர் ஏலேலசிங்கன் அல்லது எல்லோரா என்று மகாவமிசத்தில் காணப்பெறுபவன் திருவள்ளுவர் காலத்தவன் என்றும், திருவள்ளுவமாலை ஆசிரியர் காலம் சிலம்பு, மணிமேகலை ஆசிரியர் காலம் இவற்றைக் கொண்டு ஆய்ந்து, திருவள்ளுவர் காலம் கி.மு. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். சமண பௌத்தக் கருத்துகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதென்றும், அச் சமயங்கள் தமிழ்நாட்டில் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் - அதாவது - கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவியிருக்கலாம் என்றும் கொண்டு திருவள்ளுவர் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர். "தெளிந்த வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில் திருவள்ளுவர் காலம் ஏறத்தாழ கி. மு. 1 முதல் 300க்கு உட்பட்டது என்று கோடலே அமைவுடையதாகும்...' [2] ஆயின் உண்மை உணர இயலவில்லை . கி.மு-31 திருவள்ளுவர் காலம் என இன்று தமிழக அரசு கொண்டுள்ளது.


  1. பண்டைத் தமிழ்ச் சான்றோரது மெய் வழக்குத் தழீ இத் தொடர்பாக இயற்றப்பட்டு வந்த தனிச் செந்தமிழ் நூல்களில் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய தெய்வத் திருக்குறள் நூலே இறுதியாவது,- மறைமலையடிகள் - முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், ப. 102.
  2. டாக்டர் மா. இராசமாணிக்கனார் - கால ஆராய்ச்சி, பக். 32.