பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தமிழ் இலக்கிய வரலாறு


போலப் பரத்தைமை யொழுக்கத்தைக் கண்டித்தவரும் அவரே ஆகிறார். எனவேதான், அவருடைய காமத்துப் பாலில் மருதத்திணைப் பாடல்கள் இடம் பெறவில்லை.

திருக்குறளில் பல உவமைகள் சிறப்புற அமைந்திருக்கின்றன. அரியவற்றை எல்லாம் எளிதில் விளக்க அவை துணையாகின்றன.

திருவள்ளுவர் சில இடங்களில் வடமொழிக் கருத்துகளை மறுத்தும், தமிழ் வழக்கத்திற்கியைந்த தனிப்பட்ட நெறியிலே பாக்களை அமைத்தும் உள்ளார் என்ற செய்தியை நாம் பரிமேலழகரின் உரையினாலே காண்கிறோம்.

திருக்குறளுக்கு உரை எழுதியவர் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் என்பது தெரிய வருகின்றது. இவ்வாறு பதின்மர், தமிழில் திருக்குறள் தவிர வேறு எந்நூலுக்கும் இதுவரை உரை கண்டிலர். இதுவும் திருக்குறளின் பெருமையை விளக்கும் சான்றாய் உள்ளது.

இப் பதின்மர் உரையிலும் மணக்குவர், பரிதி, பரிமேலழகர், காளிங்கர் ஆகிய நால்வர் உரையே இன்று கிட்டுகின்றன. அவற்றுள்ளும் பரிமேலழகர் உரையே சிறப்பாய் அமைந்திருக்கிறது. பல்வேறு நூல்களுக்குத் தமிழில் பல்வேறு உரையாசிரியர்கள் உரை வகுத்திருப்பினும், திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியதற்கு ஒப்பான ஓர் உரை காணல் அரிது. அதனாற்றான் உரைச்சிறப்புப்பாயிரம்,

............................ நூலில்
“பரித்த உரை யெல்லாம் பரிமே லழகன்

தெரித்த உரை யாமோ தெளி'

என்று பாராட்டிப் பேசுகிறது.