பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழ் இலக்கிய வரலாறு


இடைப்பகுதி என்பர் திரு. வையாபுரிப்பிள்ளை. இக் கருத்தைப் பலர் ஒப்புக்கொள்வதில்லை.

நான்மணிக்கடிகை

இது வெண்பாவால் / இயன்ற நூற்றுநான்கு பாடல்களைக் கொண்ட நீதி நூலாகும். நான்கு மணி போன்ற உண்மைகளைக் கூறும் பாட்டுகளை உடைத்தானதால் இந்நூலுக்கு இப்பெயர் அமைந்தது. இந்நூல் தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்புகளில் ஒன்றாகிய 'அம்மை' என்னும் வனப்பில் அடங்கும் என்பது உரையாசிரியர்கள் கருத்தால் தெரியவருகின்றது.

நான்மணிக்கடிகை, விளம்பி நாகனாரால் இயற்றப்பெற்றது. சிறந்த உவமைகளும் அறிவுரைகளும் புலமை நயங்களும் பெற்று மிளிரும்வண்ணம் இந்நூலை இவர் இயற்றியிருப்பது இவருடைய நுண்மாண் நுழைபுலத்தினை நுவலும். எக்குடியிலும் நல்ல மக்கள் உதித்தல் கூடுமென்றும், மக்கள் 'இம்மையில் புகழ் வாழ்வு வாழ்ந்து மறுமையில் வீட்டுப் பேற்றினை எய்துவதையே தம் உயர்ந்த குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்' என்றும், 'கொல்லாமையும், புலாலுண்ணாமையும் சிறந்த அறங்கள்' என்றும் இந் நூலாசிரியர் வற்புறுத்திக் கூறுகின்றார்.[1] இவர் கடவுள் வணக்கத்தில் திருமாலைப் பரவுவதால் வைணவரோ என்று ஐயப்படத் தோன்றுகிறது என்பர்.

இந் நூலின் ஏழாவது பாட்டையும், நூறாவது பாட்டையும் டாக்டர் போப்பு அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள்.


  1. Prof. S.Vaiyapuri Pillai's History of Tamil Language and Literature, p. 89.