பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழ் இலக்கிய வரலாறு


கபிலரின் வேறான - புலாலுண்ணுதலையும் கள்ளுண்ணுதலையும் கண்டிக்கும் - பிற்காலப் புலவர். இந்நூலாசிரியர் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் பல கடவுளர்களையும் பரவுவதால் சமயப் பொது நோக்குடையவர் என்பது தேற்றம்.

சில அரிய கருத்துகளை இந்நூலில் காணலாம்:

'உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா.' - 17

'ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன்னின்னா.' - 23

'தீமை யுடையார் அயலிருத்தல் இன்னா .' - 26
கார் நாற்பது

இது மதுரைக் கண்ணங் கூத்தனார் பாடிய நூலாகும். கார் காலத்தின் அழகிய இயற்கை வருணனைகள் கொண்ட அகப்பொருள் நூல் இது. வினைமேற் சென்ற தலைவன் கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தலைவியிடம் கூறிச்சென்றான். அவன் குறிப்பிட்ட கார்காலம் வந்ததும், அவன் திரும்பி வராமை கண்டு தலைவி கவன்றாள். தோழி தேற்றினாள். தலைவனும் தலைவியை நினைந்து, தேர்ப்பாகனோடு பேசி, விரைந்து மீள்வதனை அழகுறக் கார் நாற்பது எடுத்து விளக்குகிறது. முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருள்கள் அழகுறப் புனையப் பெற்றிருக்கின்றன. கார் காலத்தைப்பற்றிய செய்திகளே இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ளதால், இந்நூல் “இயம்பும் காலத்தாற்' பெயர் பெற்றுள்ளது.