பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

91


களவழி நாற்பது

தம் நண்பன் சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு கழுமலம் என்னுமிடத்தில் பொருது தோற்றகாலையில், அவனைச் சிறை மீட்கப் பொய்கையார் என்னும் புலவரால் இந்நூல் பாடப்பட்டதாகும். செங்கணான் போரில் பெற்ற வெற்றியை எடுத்தியம்புவது இந்நூல். இப் பொய்கையார் முதலாழ்வார்களுள் ஒருவரான "பொய்கையாழ்வார்' என்று ஒருசிலரும், அவரின் வேறானவர் என்று மற்றும் சிலரும் புகல்கின்றனர். இதன் உண்மை துணிவதற்கில்லை. புறப்பொருள் அமைந்த நூலாகும் இது.

திணைமொழி ஐம்பது

இஃது ஐந்திணை ஒழுக்கங்களை முறையே பத்துப் பத்து வெண்பாக்களால் கூறும் ஐம்பது பாடல்கள் கொண்ட நூலாகும். இந்நூலின் ஆசிரியர் கண்ணன் சேந்தனார் எனும் புலவராவர். இந்நூலில் குறிஞ்சி நிலத்தில் பாயும் அருவியின் அழகை ஆசிரியர் அழகுறப் புனைந்திருக்கிறார்.

'யாழும் குழலும் முழவும் இயைந்தென

வீழும் அருவி விறன்மலை நன்னாட'

என்னும் அடிகள் மேற்கூறிய கருத்தை உணர்த்தும்.

தலைவன் திரும்பி வரும் செய்தியினைத் தன் உடற் பூரிப்பாலே அறிந்தேன் என்று தோழிக்குத் தலைவி கூறும் செய்தி நயமானதாகும்.

'தவழ்சிறைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி!

திகழும் திருவமர் மார்பு'