பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழ் இலக்கிய வரலாறு


திணைமாலை நூற்றைம்பது

இதனைப் பாடியவர் கணியன் மேதாவியார் என்னும் புலவராவர். இவர் சமண சமயத்தினர் என்பர். ஒவ்வொரு திணைக்கும் முப்பது பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. அகத்திணை அமைந்த இப் பாடல்களிலே வடசொற்களும் சில விரவி வருவதனைக் காண்கிறோம். இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர் என்பது நூலிற் காணக்கிடக்கும் அகச்சான்று ஒன்றால் தெரியவருகின்றது.

'இம்மையிற் செய்த வினை இம்மையிலேயே பலன் அளிக்கும்' என்றோர் அரிய செய்தியினை இவ்வாசிரியர் குறிக்கின்றார்.

'இம்மையாற் செய்ததை யிம்மையே ஆம்போலும்! உம்மையே ஆமென்பர் ஒரார்கண்'.

இந்நூலின் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

ஐந்திணை ஐம்பது

இஃது ஐந்திணைகள் ஒவ்வொன்றிலும் பத்துப்பாட்டுகளாக மொத்தம் ஐம்பது பாடல்களைக் கொண்டிலங்குவதால், ஐந்திணை ஐம்பது என்னும் பெயரினைப் பெற்றது. பல நேரிசை வெண்பாக்களும், சில இன்னிசை வெண்பாக்களும் அமைந்து ஐந்திணையின் உரிப்பொருள்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்றன. இதன் ஆசிரியர் மாறன் பொறையன் என்பர். மாறன் என்பது பாண்டியனையும், பொறையன் என்பது சேரனையும் குறிக்கும் பெயர்களாகும். இவர் தென் பாண்டி நாட்டினரோ என்னும் ஐயப்பாடு சிலர்க்கு உண்டு.

வறண்ட பாலை நிலத்திலே ஓர் வற்றாத அன்புக்காட்சியைக் காட்டுகிறார் இப் புலவர்: