பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருண்டகாலத்திலும் சில தமிழ் நூல்கள் 23 கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க நாளில் தமிழில் தனி நீதி நூல்கள் தோன்றியமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாம். தமிழ் மக்கள் தம் நாட்டில் வந்து தங்கும் அயல் நாட்டா ரோடு அன்புடன் கலந்து பழகும் இயல்பினர் என்பது யாவரும் அறிந்ததொன்று. கடைச்சங்க காலத்தில் யவனர், வடவாரியர், கடார நாட்டினர், அருமண தேயத்தார், சோனகர் முதலானோர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து தங்கியிருந்த செய்தி, சங்கத்துச் சான்றோர் பாடல்களாலும் உரையாசிரியர்களின் குறிப்புக்க ளாலும் அயல்நாட்டாருடைய யாத்திரைக் குறிப்புக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அந்நாட்களில் அவ்வயலாரோடு நெருங்கிப் பழகி வந்த தமிழ்மக்களுள் சிலர் தம் நாகரிக நிலையி னின்று மாறி ஒழுக்கங்களிலும் தவறுவார் ஆயினர் ; எனவே, அவ்வயலாருடைய தீய இயல்புகளையும் தீயொழுக்கங்களையும் அன்னோர் மேற்கொள்ளத் தொடங்கியமை தெள்ளிது. அத் தகையோரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதும், தமிழருடைய தொன்றுதொட்டுவந்த அறவொழுக்கமும் நாகரிகமும் சிதைந் தொழியாதவாறு காப்பாற்றுவதும், அக்காலத்தில் தூய வாழ்க்கை நடத்திவந்த தொல்லாணை நல்லாசிரியன்மாரின் மாபெருங் கடமையாகிவிட்டமை அறியற்பாலதாம். கடைச் சங்ககாலத்தில் நிலவிய பேரறிஞராகிய ஆசிரியர் திருவள்ளுவனார் அக்கடமையை நிறைவேற்றும்பொருட்டுத் திருக்குறள் என்ற சிறந்த நீதி நூலொன்று இயற்றி, அதன் மூலமாகத் தமிழ்மக்கட் குப் பல அரிய உண்மைகளை அறிவுறுத்தி, அன்னோர் தம் அற வொழுக்கங்களிலும் நாகரிக நிலையிலும் தவறாதவாறு அரண் செய்வாராயினர். ஒப்பற்ற அப்பெருநூலை அக்காலத்திலிருந்த புலவர் அரசர் முதலான எல்லோருமே நன்கு பயின்று நல்ல பயன் எய்தினர். அந்நூற் பயிற்சியின் பயனாகக் கடைச்சங்க நொளில் தமிழ்மக்களின் அறவொழுக்கங்களும் நாகரிகமும் பெரும் பொலும் குன்றாமல் நிலைபெற்றன என்று உறுதியாகக் கூறலாம்.