பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



13. திணைமாலை நூற்றைம்பது இது நூற்றைம்பத்து மூன்று வெண்பாக்களையுடைய ஒரு நூலாகும் ; அகத்துறைகள் பலவற்றிற்கு இலக்கியமாயமைந்தது. குறிஞ்சித்திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் நெய்தல் திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் பாலைத்திணைக்கு முப் பது பாடல்களும் முல்லைத்திணைக்கு முப்பத்தொரு பாடல் களும் மருதத்திணைக்கு முப்பது பாடல்களுமாக நூற்றைம்பத்து மூன்று பாடல்களைத் தன்பாற் கொண்டது. இந்நூல் பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர், கணிமேதாவியார் ஆவர். இவரே ஏலாதி என்ற நூலுக்கும் ஆசிரியர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இப்புலவர் வரலாற்றுள், இஞ்ஞான்று அறியப்படும் சில செய்திகளை ஏலாதி யென்னும் தலைப்பில் காணலாம். சமண சமயத்தினராகிய இவ் வாசிரியர் அகச்சுவையமைந்த இன்பப் பாடல்களையுடைய இந் நூலை இயற்றியிருப்பது, இவரது பரந்த நோக்கத்தையும் அகத் துறைப் பாடல்கள் நிறைந்த சங்கநூற் புலமையையும் இனிது விளக்குவதாகும். இந்நூலிலுள்ள நான்காம் பாடலில் " கோடாப் புகழ் மாறன் கூடலனையாள் ' என்று இவர் கூறியிருப்பது, இவ் வாசிரியர் பாண்டிவேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பெற்றவர் என் பதை நன்கு புலப்படுத்துவதாக உளது. எனவே, அப்பாண்டி யன் களப்பிரர் ஆளுகைக்குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆதல் வேண்டும். அவன் யாவன் என்பது இப்போது தெரிய வில்லை. அன்றியும் அத்தொடர், இப்புலவர் பாண்டிநாட்டில் மதுரையம்பதியில் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பதை ஓரளவு உணர்த்துதல் காண்க. இவர் காமவேளின் ஐந்தம்புகளையும் ஒரு பாடலில்3 குறிப்பிட்டிருத்தலும், அளகம், வகுளம், சுவர்க் கம், அலங்காரம் ஆகிய வடசொற்களைத் தம் நூலில் எடுத்தாண் டிருத்தலும் இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என் பதை உறுதிப்படுத்துதல் உணரத்தக்கது. 1. ஏலாதி, பா. 72, . 2, திணைமாலை நூற்றைம்பது, பா. 4. 3. க்ஷ பா. 8.