பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பாவால் ஆன பாடல்களைக் கொண்டது. இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து. மலைவளம், புனல் விளையாட்டு முதலியவற்றையடக்கி 25 முதல் 400 அடிகட்கு உட்பட்ட அளவில் பாடப்படுவது, பரிபாடலாகும். அகப் பொருள், புறப்பொருள் பகுதிகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. திருமாலைப்பற்றிய பாடல்கள் ஆறும், முருகனைப் பற்றிய பாடல்கள் எட்டும் புறப்பொருள் பற்றியன. வையைபற்றிய பாடல்கள் எட்டும் அகப்பொருள் பற்றியன.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் அரிய உரை இதற்கும் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம், இருங்குன்றம், மதுரை, வையை, இருந்தையூர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் தருகிறது; முருகனின் பெருமையையும், திருமாலின் சிறப்பையும் மிக அழகாகப் புனைந்துரைக்கிறது. இதன்கண் உள்ள 22 பாடல்களையும் பதின்மூன்று புலவர்கள் பாடியுள்ளனர்: அவற்றிற்கு இசையமைத்த புலவர்கள் வேறு. சங்க நூல்களுள் காலத்தால் மிகவும் பிற்பட்டது பரிபாடலே என்பது அறிஞர் கருத்து; டாக்டர் மா. இராசமாணிக்கனார் பரிபாடலின் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்பர். கலித் தொகையும் இக்காலத்தைச் சேர்ந்ததே என்பது அவர் கருத்து.

சிவபெருமான், முருகன். கண்ணன், அகலிகை முதலானவர்களைப் பற்றிய புராணக் கதைகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

முருகனிடம் அருள் வேண்டும் ஒருவன் ஐந்தாம் பாடலில் 'யாம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே' என்று கூறி வேண்டுகிறான்.