52
பாண்டியன் முறை தவறியதால் உயிர் விடுகிறான்; அவன் ஆட்சி குலைகிறது. அரசியல் பிழை செய்தவர் அழிவர் என்பது இந்நிகழ்ச்சியால் காட்டப்படுகிறது.
கற்பிற் சிறந்த காரிகை தொழத் தக்க தெய்வம் என்பதனைச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டமை காட்டுகிறது.
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' - என்பது கதை நிகழ்ச்சிக்கும் பின்னணிக்கும் பயன்படும் உத்தியாகும் கோவலன் கொலைக்குத் தனிப்பட்டவர் எவரும் காரணம் அல்லர்; ஊழ்வினையே என்பது ஆசிரியர் வருத்து. சமண சமயத்தின் கோட்பாடு ஊழ்வினையின் ஆற்றலை வற்புறுத் துவதாகும். அதனை இக்காப்பியத்தில் இளங்கோவடிகள் நன்கு காட்டியுள்ளார்.
நாட்டுக் காவியம்
புகார், மதுரை, வஞ்சி இம்மூன்று தலைநகர்களுக்குத் தலைமை தந்து முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் இக்காப்பியம் நடைபெறுகிறது. மன்னர்களும் பாத்திரங்களாகின்றனர். மாடலன் குமரி முனையிலிருந்து புறப்பட்டு வடவேங்கடம் வரை செல்கிறான்; காவிரிக் கரையில் பள்ளி கொண்ட அரங்கனையும், வேங்கடத்தில் வேங்கடவனையும் காண்கிறான், வேட்டுவர் பாடல்கள் குன்றக்குறவர் கூத்துகள் முதலியன இடம் பெறுகின்றன. கற்புடைய மாந்தர் பெருமை பேசப்படுகிறது. மூவேந்தரையும் ஒருங்கிணைத்துக் காட்டும் சிறப்பு இதில் காணப்படுகிறது. வடநாட்டு வேந்தரை எதிர்த்துத் தமிழகத்தின் பெருமையைச் சேரன் செங்குட்டுவன் நிலை நாட்டுகிறான். இவ்வகையில் சிலப்பதிகாரம் ஒரு தேசிய காவியமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் பெருமையையும், உயர்வுகளையும் காட்டுவதில் இது தலைசிறந்து விளங்குகிறது. காண்டங்களின் தலைப்புகளாகத் தமிழகத்தின் தலைநகர்களே அமைந்திருக்கின்றன.