பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

பாவாணர் மறைந்துவிட்டார் ; அவர்தம் ஆய்வுக் கொழுமையின் முழுமைப் பயனும் தமிழுலகிற்கும் மொழியாய்வுலகிற்கும் கிட்டாது போனமை பேரிழப் பாகும். அவர்தம் வாணாளிறுதி நூல்களாக இரண்டை எழுத எண்ணியிருந்தார். குமரிமொழியும் அதன் பல்கிளைப் பெருக்கமும் (Lemurian Language and its ramifications) என்னும் ஆங்கில நூலும், தன் வரலாறும் அவர்தம் மறைவிற்கு முன்னர் எழுதவிரும்பினர். அவர்தம் மொழியாய்வின் இறுதிநிலையான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப் பணியும் முற்றது தொடக்க நிலையிலேயே நிற்கவேண்டியாயிற்று.

பாவாணர் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் அறிஞர் எப்போது வாய்ப்பரோ அறியோம். இந்நிலையில் பாவாணரால் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களும் ஆய்வுக் கருவூலங்களாக அமைந்தனவெனினும் அவை மறுபதிப்பாகவில்லை.அவற்றை நாட்டுடைமையாக்குவதிலும் தமிழக அரசு சுணக்கம் காட்டியே வருகின்றது. இச்சூழலில் பாவாணரின் மொழியாய்வு உண்மைகளும் கொள்கைகளும் பரவுதல் வேண்டும்என்னும் அவாவினால் எம்முடைய இம் முதல் வெளியீடு அமைகின்றது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் முன்னர் 'தென்மொழி'யிலும் 'முதன்மொழி'யிலும் வெளி யானவை அவ்விதழ்களுக்கு நன்றியுடையோம்.