உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் காத்த தலைவர்கள்

என்பார்கள். சிவனது அருளால் பிறந்த மகன் சிறந்த அறிஞனைப்போல் விளங்கினான். அக்காரணத்தால் அக்குழந்தைக்குத் தந்தையார் உருத்திரசன்மன் என்ற பெயரைச் குட்டினார்.

பிள்ளையின் இயல்பும் பெருமையும்

உருத்திரசன்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். அவனுடைய கண்கள் பசுமை நிறமாக இருந்தன. அவன் தலையில் உரோமங்கள் குறைவாகவே இருந்தன. அவனுக்கு ஐந்து ஆண்டுகள் நிரம்பிவிட்டன. ஆயினும் அவன் ஊமைப் பிள்ளையாகவே இருந்தான். ஆனால் கூர்மையான அறிவுள்ளவனாகத் தோன்றினான். ஆதலின் தந்தையார் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவன் பிறந்த நாள் முதல் உப்பூரிகுடி கிழாரின் வாணிகமும் செல்வமும் வளர்ந்து ஓங்கின. வணிகர் வாழும் உப்பூரிகுடி ஊரே வளம் பெற்று விளங்கியது. அதனால் உருத்திரசன்மனை எல்லாரும் முருகன் அவதாரம் என்றே போற்றினர்.

இலக்கண நூலுக்கு உரை காணல்

அந்நாளில் பாண்டிய நாட்டை ஆண்ட அரசன் உக்கிரப் பெருவழுதி என்பவன்.