பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைகண்ட உத்தமன்

15

அவன் தமிழ்மொழிக்குப் பொருள் இலக்கணம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டான். அவன் கவலையைப் போக்க இறைவரே ஓர் அகப்பொருள் இலக்கண நூலை இயற்றிக் கொடுத்தார். அவன் அந்நூலைச் சங்கப் புலவர்களிடம் கொடுத்தான். அதற்குச் சிறந்ததோர் உரை வரையுமாறு வேண்டினான். சங்கத்தில் இருந்த நாற்பத்தொன்பது புலவர்களும் நாற்பத்தொன்பது உரைகளை எழுதிவிட்டனர்.

அரசனிடம் முறையிடுதல்

அப்புலவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் உரையே உயர்ந்தது என்று பேசித் திரிந்தனர். அவற்றில் சிறந்த உரை எது என்பதை அறிய விரும்பினர். அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து பாண்டியன் அரண்மனையை அடைந்தனர். அவனை நேரில் கண்டு, தங்கள் கருத்தைக் கூறினர். "அரசே! நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே உரை கண்டு வரைந்துள்ளோம் ; எங்கள் உரைகளில் எவரது உரை உயர்ந்தது என்பதை அறிய வேண்டும் , அதனைத் தேர்ந்து சொல்லுவதற்கு வல்லமை வாய்ந்த ஒருவனை நீ வழங்கியருள வேண்டும் ; அவன் நடுநிலையாளனாக இருக்க வேண்டும்" என்று முறையிட்டனர்.