பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. திருமுறை கண்ட சோழன்

முற்காலப் பிற்காலச் சோழர்

நம் தமிழ்நாடு முற்காலத்தில் மூவேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமை உடையது. அம்மூவேந்தர்களில் சோழர் என்பார் சோழ வளநாட்டை ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழ மன்னரை முற்காலச் சோழர் என்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட சோழ மன்னரைப் பிற்காலச் சோழர் என்பார்கள்.

தஞ்சைப் பெரிய கோவில்

பிற்காலச் சோழ மன்னர்களில் பெருமை வாய்ந்தவன் இராசராசன் என்பான். அவன் தஞ்சை மாநகரைத் தலைநகராகக் கொண்டு சோழப் பெருநாட்டை ஆண்டு வந்தான். அவன் கலைப்பற்றும் கடவுட்பற்றும் நிறைந்தவன். அதனால் தஞ்சைமாநகரில் கலைச் செல்வம் மிக்க திருக்கோவில் ஒன்றை அமைத்தான். அதற்கு ‘இராசராசேச்சுரம்’ என்னும் பெயரைச் சூட்டினான். அதனைத் ‘தஞ்சைப் பெரிய கோயில்’ என்று எல்லோரும் சொல்லுவர். அது தமிழ்நாட்டின் கலையறிவை விளக்கும் தலைசிறந்த சின்னமாக விளங்கி வருகிறது.