பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ் காத்த தலைவர்கள்

ஆங்கிலக் கல்வியும் ஆசிரியப் பணியும்

அவரது தமிழ்ப் புலமையைக் கண்ட சகோதரர்கள் அவருக்கு ஆங்கிலக் கல்வியும் அளிக்க விரும்பினர். அதனால் அவரைப் பன்னிரண்டாம் வயதில் பார்சிவல் பாதிரியாரின் ஆங்கிலக் கலாசாலைக்கு அனுப்பினர். அவர் ஆங்கிலத்தையும் பாங்குறப் பயின்றார். ஆங்கிலத்தைத் தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கும் திறமை, அவருக்கு அருமையாக வாய்த்தது. அவரது புலமைத் திறனைக் கண்ட பாதிரியார், அவரைத் தம் கலாசாலையில் ஆசிரியராக நியமித்தார். அவரை மேல்வகுப்பிற்குத் தமிழும், கீழ் வகுப்பிற்கு ஆங்கிலமும் கற்பிக்குமாறு செய்தார்.

விவிலிய மொழிபெயர்ப்பு

நாவலரின் இருமொழிப் புலமையைப் பாதிரியார் நன்கு பயன்படுத்த விரும்பினார். கிறித்துவ வேதமாகிய விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்குமாறு நாவலரை வேண்டினார். அவரும் அந்நூலைச் செம்மையாக மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டுச் சென்னை மாநகரிலும் சிலர் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தனர். பார்சிவல் பாதிரியார், நாவலரைச் சென்னைக்கு அழைத்து வந்தார்.