பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசனநடை கைவந்த வல்லார்

79


அவர் ஆக்கிய விவிலிய மொழிபெயர்ப்பைக் கிறித்துவ சங்கத்தாரிடம் அளித்தார். அதைப் போல் அறிஞர்கள் பலர் ஆக்கிய மொழி பெயர்ப்புகளும் சங்கத்தாருக்கு வந்திருந்தன. தமிழும் ஆங்கிலமும் வல்ல அறிஞர்கள் பலர் கூடியிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்தனர். அவற்றுள் ஆறுமுக காவலரின் மொழி பெயர்ப்பே முதன்மையானது என்று தேர்ந்து எடுத்தனர். அதனால் நாவலர் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்ற புகழ் நாடெங்கும் பரவியது.

சமயப்பணி, தமிழ்ப்பணி

நாவலர் சிவபத்தியிற் சிறந்தவர்; சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். அதனால் அவர் சைவ சமய உண்மைகளே நன்றாக அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காகச் சைவ சமய நூல்களைச் செம்மையாகக் கற்றுத் தெளிந்தார். வடமொழியில் உள்ள சைவ ஆகம நூல்களைக் கற்று அறிய விரும்பினார். அதற்காக வடமொழியைப் பயின்றார். அதிலும் சிறந்த அறிவைப் பெற்றார். அவர் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டார். அதனை நிறைவேற்றும் வசன நூல்களை எளிய நடையில் எழுதி வெளியிட்டார். அவர்