பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழ் நாவல்


உசிதமாக இருக்குமா என்ற போராட்டம் மனதிற்குள் நிகழ்ந்தது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக அடியிலிருந்து படித்துப் பார்த்தேன்............. நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால் அது அலையோசைதான் என்ற எண்ணம் படிக்கும் போதே உள்ளத்தில் தானாக உதயமாயிற்று’ என்று நம்பிக்கையுடன் எழுதுகிறார். எழுத்தாளர்களுக்கு இந்த உறுதியும் பெருமிதமும் இருக்க வேண்டும்.

அவருக்கு முதலில், இதைப் புத்தகமாக வெளியீடுவது உசிதமா என்ற போராட்டம் தோன்றுவதற்குக் காரணம் என்ன? நம் காலத்தில் நிகழ்ந்தவற்றுக்குரிய மதிப்பு இப்போது சரிவரத் தோன்றாது என்ற நினைவா? கால அணிமையும் பழகிப்போனது என்ற சலிப்பும் உரிய வகையில் சுவையை உணரத் தடையாக இருக்கும் என்ற எண்ணமா?

அவர் எதிர்பார்க்கிறபடி வருங்காலத் தலைமுறைகளுக்கு இந்த நாவல் மிக்க மதிப்புடையதாகச் சுவை உடையதாகிவிடும் என்பதில் ஐயம் இல்லை. புதியதாகப் போட்ட எலுமிச்சங்காய் ஊறுகாயைச் சிறிது நாள் கழித்துச் சுவைத்தால் பின்னும் நன்றாக இருப்பது போலச் சம கால நிகழ்ச்சி என்ற உணர்வு போனபிறகு இந்த நாவலுக்குச் சுவை உயர்ந்துவிடும்.

பின்னணி

‘கோடானுகோடி மக்களின் கனவு நிறைவேறிப் பாரத நாடு சுதந்தரம் அடையும் காலம் நெருங்கியபோது காந்தி மகானின் ஆத்ம சக்திக்கு எதிராக நாசகார சக்திகள் கிளம்பிக் கர்ண கடோரமான கூச்சலுடன்