பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் நாவலின்
தோற்றமும் வளர்ச்சியும்


1. பொது வரலாறு


தை கேட்பதென்பது மனிதனிடத்தில் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்துவரும் இயல்பு.. வாய்மொழியாக ஒருவன் சொல்ல, அதை வேறு ஒருவன் கேட்டு இன்புற. அப்படி இன்புற்றவன் தான் கேட்டதை மற்றவர்களுக்குச் சொல்ல, இப்படியே கதைகள் படர்ந்து வந்தன. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு அக்காலத்தில் உண்டாகவில்லை. கவி உருவத்தில் அமைந்தவைகளே இலக்கியம் என்ற எண்ணம். இருந்து வந்தது. எல்லாவற்றையும் எழுத்து வடிவில் அமைக்கும் வசதி இல்லாத அந்தப் பண்டைப் பழங்காலத்தில் கவிதையை அப்படி அப்படியே மனனம் பண்ணிச் சொன்னார்கள். சிலவற்றை எழுதி வைத்தார்கள். கவி அல்லாதவற்றின் சாரமும் சில விவரங்களும் நினைவில் இருந்தன. அவற்றை அவ்வப்போது கதை சொல்லுபவர்கள் தம்முடைய மனோபாவத்துக்கும் ஆற்றலுக்கும் ஏற்பக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் சொல்லி வந்தார்கள்.