பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ் நாவல்

யும் கோவிந்தனை மறக்கமாட்டார்கள். ரங்கராஜுவின் நாவல்களிற் சில நாடகமாகவும் மேடை ஏறின. சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக உள்ள சிலரின் மோசடிகளையும் ஒழுக்கப் பிசகையும் அந்த நாவல்களின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். ஆயினும் அவருடைய நாவல்களும் வெறும் பரபரப்பை ஊட்டும் கதைகளாக இருந்தனவேயன்றி மன நிறைவையும், ஆழ்ந்த இன்பத்தையும் தரும் இலக்கியத் தகுதி பெற்றனவாக இல்லை . டி.டி. சாமி என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை அக்காலத்தில் பலர் கையில் இருந்த நாவல்களில் ஒன்று. முதலில் இரண்டு பாகங்களாக வெளியாகிக் செலவாயிற்று. அந்த வேகத்தைக் கண்டு அதை நீட்டி மூன்றாம் பாகம் ஒன்றும் வெளியிட்டார். ஆனால் அது முதல் இரண்டு பாகங்களைப்போல மக்களின் கவனத்துக்கு உரியதாக இருக்கவில்லை.

ரங்கூனில் நல்ல உத்தியோகத்தில் இருந்த தி. ம. பொன்னுசாமிப் பிள்ளை யென்பவர் சில நாவல்களை எழுதி வெளியிட்டார். அவை யாவும் மர்ம நாவல்களே. விஜய சுந்தரம் என்பது அவர் எழுதிய முதல் நாவல். அவருடைய நாவல்கள் எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பார்க்கலாம். முதல் அத்தியாயத்தில் ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார். அதில் யாரேனும் காணாமற் போயிருப்பார்கள். ஒரு மர்மம் இருக்கும். அடுத்த அத்தியாயம் இருபது ஆண்டுகளுக்குப் பின்பு நடப்பதைச் சொல்லும். இது அவருடைய நாவல்கள் எல்லாவற்றிலும் உள்ள பொதுவான அமைப்பு. அது மாத்திரம் அன்று அவருடைய நாவல்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணுடைய அத்தியாயத்தில் பதினெட்டென்று நினைக்கிறேன். சரியாக நினைவு இல்லை சிவஞான போதத்தில் வரும் ஒரு சூத்திரத்தைப் பற்றிய விளக்கம் இருக்கும்.