பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

39

சிறு விரிசல்

வ்வாறு வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர்த்த நாவல்கள் தமிழ்நாட்டில் மலிந்தபொழுது முதலில் யாவரும் அவற்றை வரவேற்றுப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பத்திரிகையில் ரவீந்தரர் நாவலும், வேறொரு பத்திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், மற்றொன்றில் சந்த்சந்திரர் தாவலும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்கதையாக வந்தன. அவற்றை ஆர்வத்துடன் வாசித்து இன்புற்றார்கள். ஆனால் இந்த இன்பத்துக்கிடையே ஒரு சிறு விரிசல் தோற்றியது, அது நல்ல காலத்துக்காகத் தோற்றிய விரிசல் என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் சிறந்த சிறு கதைகள் பத்திரிகைகளில் வந்தன. அவற்றை எழுதிய எழுத்தாளர்களைத் தமிழ் மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். அதே சமயத்தில் தொடர் கதைகள் மட்டும் மொழிபெயர்ப்பாக இருந்தன. இந்த வேற்றுமையை இப்போது மக்கள் உணரத் தொடங்கினார்கள். சிறு கதையைச் சொந்தமாக எழுதிக் குவிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழில் நாவல் எழுதும் திறமை இல்லையா? கற்பனை வளம் இல்லையா? எவ்வளவு நாளைக்கு இரவல் இலக்கியத்தில் இன்புறுவது? இத்தகைய எண்ணம் இலக்கிய ரசிகர்களுக்கு உண்டாயிற்று. இந்த எண்ணம் சிறு காற்றாக உலவிப் புயலாக மோதியது. அதன் விளைவாகத் தமிழிலும் சொந்தமாக நாவல்களை எழுதத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வந்தார்கள்.

பத்திரிகைகளின் தொண்டு

ங்கே ஒரு முக்கியமான கருத்தைச் சொல்வது இன்றியமையாதது. சிறு கதைகளும் கட்டுரைகளும் தமிழ்நாட்டில் அதிகமாக உண்டாவதற்குத் தூண்டுகோலாக