பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. மூன்று நாவல்கள்

த்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் நாவல் தோன்றி வளர்ந்து வருகிறது என்பதைப் பார்த்தோம். அந்த நூற்றாண்டின் நாவல்களில் முதலில் தோன்றிய நாவல் என்பதனால் பிரதாப முதலியார் சரித்திரத்தையும், அதே நூற்றாண்டில் தோன்றியவற்றில் இலக்கியத் தகுதி பெற்றவை என்பதால் கமலாம்பாள் சரித்திரத்தையும் பத்மாவதி சரித்திரத்தையும் இப்போது ஆராயலாம் என்று எண்ணுகிறேன். இந்த மூன்று நாவல்களும் சரித்திரம் என்ற பெயரை உடையனவாக இருப்பது ஒரு விநோதமான ஒற்றுமை. ஒருகால் முதலில் தோன்றிய நாவலுக்குப் பிரதாப முதலியார் சரித்திரம் என்று வேதநாயகம் பிள்ளை பெயர் வைத்ததனால் நாவலை குறிக்க அதனையே கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டு மற்ற இரண்டு நாவலாசிரியர்களும் அப்படி வைத்தார்கள் போலும். அ மாதவய்யா முதலில் எழுதிய அரைகுறை நாவலும் சாவித்திரி சரித்திரம் என்ற பெயரை உடையது. ஆனால் பத்மாவதி சரித்திரத்துக்குப் பின் அவர் எழுதிய நாவல்களுக்குச் சரித்திரம் என்ற பெயரை வைக்கவில்லை. வேதநாயகம் பிள்ளை கூடத் தம்முடைய இரண்டாவது நாவலுக்குச் 'சுகுணசுந்தரி' என்ற பெயரையே வைத்தார்; 'சுகுணசுந்தரி' சரித்திரம் என்று வைக்கவில்லை.

தமிழில் சரித்திரம் என்பதை வாழ்க்கை வரலாற்றுக்கும் (Biography) நாட்டு வரலாற்றுக்கும் (History) பொதுவாகவே வழங்கி வந்தார்கள். பிறகு சிலர் வாழ்க்கை வரலாற்றை ஜீவிய சரித்திரம் என்று சொன்னார்கள்.